மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு? விவசாய கடன் இலக்கு 12 லட்சம் கோடி

தினகரன்  தினகரன்
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு? விவசாய கடன் இலக்கு 12 லட்சம் கோடி

புதுடெல்லி: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், விவசாய கடன் இலக்கு ₹12 லட்சம் கோடியாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.விவசாய கடன் இலக்கை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் விவசாய கடன் ₹9 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டில் மொத்தம்  ₹10.66 லட்சம் கோடி வழங்கப்பட்டது. கடந்த 2017-18ம் ஆண்டில் ₹10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ₹11.68 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இந்த 2019-20ம் நிதியாண்டும் விவசாய  கடன் இலக்கு 10 சதவீதம் அல்லது ₹1 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டு ₹12 லட்சம் கோடி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக விவசாய கடன்கள் 9 சதவீத வட்டியில் வழங்கப்படுகின்றன. ஆனால், அரசு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கிறது. இதன் மூலம், ₹3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களை 7 சதவீத வட்டியில் பெறலாம்.  கடனை குறித்த தேதியில் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அவர்கள் 4 சதவீத வட்டியை செலுத்தினால் போதும்.

மூலக்கதை