மறுபடியும் காக்கிச்சட்டை அணியும் விஜய்ஆண்டனி

தினமலர்  தினமலர்
மறுபடியும் காக்கிச்சட்டை அணியும் விஜய்ஆண்டனி

விஜய் ஆண்டனி கடைசியாய் நடித்த திமிரு புடிச்சவன் படம் வணிகரீதியில் தோல்வியடைந்தது. ஆனாலும் 'அக்னி சிறகுகள்', 'கொலைக்காரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரேநேரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 'தமிழரசன்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இவர் சில வருடங்களுக்கு முன் 'ஜெயம்' ரவி நடிப்பில் வெளியான 'தாஸ்' என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இசை அமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி, இதுவரை தான் நடிக்கும் படங்களுக்கு தானே தொடர்ந்து இசை அமைத்து வந்தார்.

இந்தநிலையில் முதன்முதலாக இந்த படத்தின் மூலம் இளையராஜாவுடன் இணைந்துள்ளார். 'திமிரு புடிச்சவன்' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த விஜய்ஆண்டனி 'தமிழரசன்' படத்திலும் போலீஸ் கேரக்டரில்தான் நடிக்கிறார். 'தமிழரசன்'படத்தை ஃபெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரான ஒளிப்பதிவாளர் ஜி. சிவா தன்னுடைய மனைவியின் பெயரில் தயாரிக்கிறார்.

மூலக்கதை