கலாம் சாட், மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோளுடன் இந்தாண்டின் முதல் ராக்கெட் 24ம் தேதி விண்ணில் பாய்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கலாம் சாட், மைக்ரோசாட்ஆர் செயற்கைகோளுடன் இந்தாண்டின் முதல் ராக்கெட் 24ம் தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை: ஹாம் ரேடியோ சேவைக்காக கலாம் சாட் செயற்கைகோள், பூமி கண்காணிப்புக்காக மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோள் ஆகிய இரண்டு செயற்கைகோள்களை பி. எஸ். எல். வி-சி44 ராக்கெட் உதவியுடன் வரும் 24ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள், மண்வளம் ஆகியவற்றை கண்காணிக்க ‘ஹைசிஸ்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை பி. எஸ். எல். வி சி-43 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதேபோல், இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் 24ம் தேதி ஆந்திர மாநிலம்  ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி44 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

இந்த ராக்கெட்டில் ஹாம் ரேடியோ சேவைக்காக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் செயற்கைகோள், பூமி கண்காணிப்பிற்காக இஸ்ரோ தயார் செய்த மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோள் ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த வருடத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தும் முதல் ராக்கெட் இதுவாகும். பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 274. 12 கி. மீட்டர் தூரத்தில் செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதேபோல், இந்த செயற்கைகோள் 4 நிலைகளை கொண்டது. மேலும், பி. எஸ். எல். வி ராக்கெட் வரிசையில் இது 46வது ராக்கெட் ஆகும்.

இதேபோல், பி. எஸ். எல். வி-டிஎல் நவீன ரகத்தில் பி. எஸ். எல். வி-சி44 ராக்கெட் முதலாவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் நாளை மறுநாள் 22ம் தேதி தொடங்க உள்ளது.

.

மூலக்கதை