எதிர்க்கட்சிகளின் `மெகா கூட்டணி’ மக்களுக்கு எதிரானது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சிகளின் `மெகா கூட்டணி’ மக்களுக்கு எதிரானது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சில்வாசா: ‘‘எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி எனக்கு எதிரானது அல்ல; அது நாட்டுமக்களுக்கு எதிரானது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். தாத்ரா நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகர் சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு  அடிக்கல்லை நாட்டி பேசியதாவது: ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் என் மீது சிலர் கோபத்தில் உள்ளனர். பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வந்த அவர்களை தடுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இது எனக்கு எதிரான கூட்டணியல்ல; மக்களுக்கு எதிரானது. மேற்குவங்கத்தில் பாஜவுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ தான் உள்ளார். ஆனால் அங்குள்ளவர்கள் எங்களை கண்டு பயப்படுகிறார்கள். தங்களை காப்பாற்றுமாறும் கூச்சலிடுகின்றனர் என்றார்.முன்னதாக குஜராத்தின் சூரத் அருகேயுள்ள ஹஜிராவில் நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் ஜங் ஹாங் மற்றும் எல் அன்டி தலைவர் ஏஎம் நாயக் ஆகியோர் பங்கேற்றனர். லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனம் அமைத்துள்ள இந்த தொழிற்சாலையில் கே9 வஜ்ரா என்ற 155 எம்.எம் 52 காலிபர் திறன் கொண்ட 100 டாங்குகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பாதுகாப்பு துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தை புகுத்தும் வகையில் இந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். கடந்த 2017ம் ஆண்டில் ₹4500 கோடி ஒப்பந்தத்தை எல் அன் டியுடன் செய்து கொண்டுள்ளோம். தனியார் நிறுவனம் பாதுகாப்பு துறையில் பங்களிப்பு செய்வதை பெருமையாக கருதுகிறேன் என்றார். தாயுடன் மோடி சந்திப்பு: பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையம் செல்லும் வழியில், ரைசான் கிராமத்திற்கு சென்று தனது தாய் ஹீராபென் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

மூலக்கதை