காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி அதிகம்: பாஜவுக்கு ப.சிதம்பரம் பதிலடி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி அதிகம்: பாஜவுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகளவு இருந்துள்ளதாக பாஜ அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: போலியான கணக்கு அடிப்படையில் நிதி ஆயோக் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அளவீட்டை பொருளாதார நிபுணர்கள் மற்றும் புள்ளியல் ஆய்வாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கடந்த 2004-2009ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தான் சிறப்பான வளர்ச்சி விகிதத்தை நாடு பெற்றது. சுதந்திரம் பெற்ற பிறகு நாடு பெற்ற சிறந்த வளர்ச்சி விகிதம் இதுவாகும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரசை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் அகமது படேலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், `‘கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்தியாவின் கடன்தொகை 50 சதவீதம் அதிகரித்து ₹82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை