லாலுவின் ஜாமீன் ஜன.28 வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
லாலுவின் ஜாமீன் ஜன.28 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் இடைக்கால ஜாமீனை ஜனவரி 28ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, ஐஆர்சிடிசிக்கு சொந்தமான இரண்டு ஓட்டல்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் லாலு தற்போது ஜாமீனில் உள்ளார்.இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, லாலுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஜனவரி 28ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ஜாமீனையும் ஜனவரி 28 வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், ஜனவரி 28ம் தேதி விசாரணையின்போது லாலு மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மூலக்கதை