கட்சி மாறிய மத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன்: லாலு மகள் சர்ச்சை பேச்சு

தினகரன்  தினகரன்
கட்சி மாறிய மத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன்: லாலு மகள் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: ‘‘ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து கட்சி மாறிய, மத்திய கிராம மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் கிரிபால் யாதவின் கையை வெட்ட நினைத்தேன்’’ என லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவின் மிக நெருங்கிய விசுவாசியான ராம் கிரிபால் கடந்த 2014ம் ஆண்டு மார்சில் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பின்னர் அந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியில், லாலுவின் மகள் மிசா பாரதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவின் பிக்ராம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மிசா, “எங்கள் பண்ணையில் புல் வெட்டும் வேலை பார்த்தவர் ராம் கிரிபால் யாதவ். அவர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் எப்போது சுஷில்குமார் மோடியை சந்தித்து பாஜவில் இணைந்தாரோ, அப்போதே புல் வெட்டும் அதே இயந்திரத்தில் அவரது கைகளை வெட்டத் தோன்றியது” என்று பேசினார். தற்போது மத்திய இணை அமைச்சராக பதவியில் இருக்கும் ராம் கிரிபாலின் கைகளை வெட்ட நினைத்தேன் என்று லாலு மகள் மிசா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை