ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் செரீனா

தினகரன்  தினகரன்
ஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் செரீனா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவுடன் நேற்று மோதிய செரீனா (16வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. வெளியேறினார் வீனஸ்: மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் (ரோமானியா) மோதிய செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்துக்கு நீடித்தது. ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா தனது 3வது சுற்றில் சூ வெய் சையுடன் (சீன தைபே) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஒசாகா 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 1 மணி, 57 நிமிடம் போராடி வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), அனஸ்டேசியா செவஸ்டோவா (லாட்வியா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர்.ஜோகோவிச் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலாவை 2 மணி, 22 நிமிடம் போராடி வென்றார். மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியின்போது மின் விளக்குகள் தேவையில்லாமல் அதிக வெளிச்சத்துடன் எரிந்ததால் கடுப்பான ஜோகோவிச், தனது கவனத்தை சிதறவிட்டதுடன் 3வது செட்டில் 6 கேம்களை இழந்தார். நடுவர்களிடம் விளக்குகள் எரிவதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். டிவி நேரடி ஒளிபரப்புக்காகவே விளக்குகள் எரியவிடப்பட்டதாக நடுவர்கள் விளக்கம் அளித்தனர். இதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட ஜோகோவிச், பந்து எனக்கு நன்றாகத் தெரிகிறது... உங்களுக்கு தெரிகிறதா என்று ஜோக் அடிக்க, அனைவரும் சிரித்து கை தட்டினர். மற்றொரு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்டை எளிதாக வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் கெய் நிஷிகோரி (ஜப்பான்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), மிலோஸ் ரயோனிச் (கனடா), கரினோ புஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை