வியாபாரிகள் வாழ்வாதாரம் செழிக்க. 'லோன் மேளா'வரும், 27 முதல் வாரி வழங்க திட்டம்

தினமலர்  தினமலர்

கோவை,:வியாபாரிகள், மகளிர் குழுவினர், தொழில்துறையினர் என, அனைத்து தரப்பினருக்கும், தகுதிக்கேற்ப, வங்கி கடன் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தொண்டாமுத்துார் தொகுதியை சேர்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு, வரும், 27ல் கடன் வழங்கப்படுகிறது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சுயதொழில் திட்டத்தின் கீழ், தனி நபர் மற்றும் மகளிர் குழுவினருக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், தொழில் ரீதியான வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில், மகளிர் திட்டம் மற்றும் வங்கிகள் வாயிலாக, 'லோன் மேளா' நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தொகுதி வாரியாக முகாம் நடத்தி, ஒவ்வொரு பிரிவினருக்கும் கடன் வழங்கப்பட உள்ளது.முதல்கட்டமாக, தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வரும், 27ல் 'லோன் மேளா' நடத்தப்படுகிறது. புறநகர் பகுதியில் வசிப்போருக்கு, பிப்., 2, 3ல் நடத்தப்படும். இதர தொகுதிகளில் படிப்படியாக மேளா நடத்தி, கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட, 14வது வார்டு சாலையோர வியாபாரிகள் உடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மகளிர் திட்டக்குழு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கடன் பெறும் தகுதி, தேவையான ஆவணங்கள் சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கப்பட்டு, விண்ணப்பம் வழங்கப்பட்டது. பெறப்படும் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு, வரும், 27ல் கடன் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்படும்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வியாபாரிகள், மகளிர் குழுவினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருக்கும் வங்கிகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; படிப்படியாக முகாம் நடத்தப்படும்' என்றனர்.விண்ணப்பம் வழங்கல்சாலையோர வியாபாரிகள் குழு தலைவர் உபைது ரகுமான் கூறுகையில், ''சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட, சிறு கடன் வழங்கப்பட இருக்கிறது. வியாபாரிகளை சந்தித்து கடன் விண்ணப்பம் வழங்கி வருகிறோம்,'' என்றார்.

மூலக்கதை