சபரிமலைக்கு இன்றும் 2 இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலைக்கு இன்றும் 2 இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர்

திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு கடந்த 16ம் தேதி வந்து திருப்பி அனுப்பப்பட்ட 2 இளம்பெண்கள், இன்று அதிகாலை மீண்டும் தரிசனத்திற்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறி ேபாலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தநிலையில் கடந்த 16ம் தேதி கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு வந்தனர். இவர்களை போலீசார் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சரங்குத்தி பகுதியில் வைத்து பக்தர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரித்ததால் போலீசார் இருவரையும் கட்டாயப்படுத்தி திரும்ப அழைத்து சென்றனர். அப்போது ரேஷ்மா நிஷாந்த் கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அன்று முதல் நான் சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதம் துவங்கியுள்ளேன்.

சபரிமலையில் தரிசிக்கும் வரை மாலையை கழற்ற போவதில்லை. ஆனால் போலீசார் எங்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த மகர விளக்கு காலம் நிறைவடைவதற்குள் மீண்டும் தரிசனத்திற்கு வருவேன் என்றார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5. 15 மணியளவில் ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் உள்பட 8 பேர் அடங்கிய குழு நிலக்கல் வந்தது. இதில் 6 பேர் ஆண்கள்.

இவர்கள் இளம்பெண்களுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் ஆவர். இதையடுத்து ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா இருவரும் நிலக்கல்லில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம், தங்களுக்கு சபரிமலை தரிசனத்திற்கு செல்ல பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

அதற்கு போலீசார், பம்பை முதல் சன்னிதானம் வரை ஐயப்ப கர்ம சமிதி தொண்டர்கள் உள்பட போராட்டகாரர்கள் திரண்டு இருப்பதால் தரிசனத்திற்கு செல்வது பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறினர். ஆனால் நாங்கள் தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டோம் என்று இளம்பெண்கள் கூறினர்.

இதையடுத்து தரிசனத்தற்கு அழைத்து செல்ல தயார் என்றும், வழியில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக திரும்பி செல்ல வேண்டும் என்றும் போலீசார் கூறினர்.

ஆனால் அதை இருவரும் ஏற்கவில்லை. இதையடுத்து போலீசார் டிஜிபி லோக்நாத் பெகராவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர்.
இருவரையும் அழைத்து சென்றால் சன்னிதானம் செல்லும் வழியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக டிஜிபியிடம் நிலக்கல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரையும் தனிசனத்திற்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று டிஜிபி கூறினார். இதனால் இருவரையும் தரிசனத்திற்கு அழைத்து செல்லமுடியாது என்று போலீசார் கூறினர்.

அதனை தொடர்ந்து இருவரையும் ஜீப்பில் ஏற்றி எருமேலிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

பம்பைக்கு அதிகமாக வரும் இளம்பெண்கள்
சபரிமலையில் தரிசனம் செய்ய இளம்பெண்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பம்பை கணபதி கோயில் வரை தரிசனம் செய்து திரும்பும் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . பெரும்பாலும் தமிழகம், ஆந்திராவில் இருந்து குழுக்களாக வரும் இளமபெண்கள் பம்பை, கணபதி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குழுக்களுடன் சேர்ந்து வரும் இளம்பெண்களை போலீசார் நிலக்கல்லிலேயே தடுத்த நிறுத்துகின்றனர்.

தங்களுக்கு பம்பை கணபதி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினால், போலீசார் அவர்களை பம்பை வரை செல்ல அனுமதிக்கின்றனர். கடந்த சில தினங்களாக இதுேபால பம்பை கணபதி கோயில் வரை செல்லும் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2012 வழக்குகள்
சபரிமலை விவகாரம் தொடர்பாக பதிவு செய்யபட்ட வழக்குகள் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் நேற்று கேரள போலீஸ் தாக்கல் செய்தது.

இதில் அக். 17 முதல் ஜன. , 4ம் ேததி வரை 2012வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் 67, 094 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 10561 பேர் மீது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை