நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி குறித்து போலி அட்டவணை வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி குறித்து போலி அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை  தேர்தல் தேதி குறித்து சமூக வலைதள ஊடகங்களில், போலி தேர்தல் தேதி அட்டவணை வெளியான விவகாரம் தொடர்பாக, டெல்லி சிஇஓ சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக்  போன்ற நிறுவனங்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

போலி அட்டவணையில், ஏப். 7 முதல் ேம 17ம் தேதி வரை 9 கட்ட தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக பதிவுகள் வெளியாகி உள்ளது.

மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு முன்பாக மக்களவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 11, 12ம் தேதிகளில் டெல்லியில் தலைமை ேதர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனையில், தேர்தல் அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகள் குறித்து முக்கியமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, கடந்த 2004ம் ஆண்டு நான்கு கட்டமாக மக்களவை தேர்தலை பிப்ரவரி 29ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தேர்தல் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி, மே 10ம் தேதி முடிந்தது. கடந்த 2009ம் ஆண்டில் 5 கட்ட மக்களவை தேர்தலை, மார்ச் 2ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி முடிந்தது. கடந்த 2014ம் ஆண்டில் மக்களவை தேர்தல் தேதி மார்ச் 5ம் தேதி அறிவிக்கப்பட்டு, 9 கட்டங்களாக நடந்த தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி முடிந்தது.

அதேபோல், வரும் மக்களவை தேர்தலுக்கான தேதியை பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.

தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தும், அம்மாநிலத்தில் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதற்கிடைேய, கடந்த சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் தேர்தல் தேதி அட்டவணை தொடர்பாக போலியான தகவல்கள் வெளியாகின.

அதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது. மக்களை குழப்பும் விதமாக போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி சார்பில், டெல்லி சைபர் க்ரைம் போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில தேர்தலை நடத்த 22. 3 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 17. 3 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் (விவிபேட்) பயன்படுத்தப்படும்.

இதற்காக 10. 6 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மக்களைக் குழப்பும் என்பதால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கி கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 15ம் தேதி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி குறித்து போலியான அட்டவணை தயாரித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவின. இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி சைபர் க்ரைம் போலீசில், தேர்தல் பிரிவு அதிகாரி சரண்ஜித் சிங் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் என்ற பெயரில்தான் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட ேபாலி பதிவை வெளியிட்ட நபர்கள் குறித்து டெல்லி சிட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை, 9 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளன. முறைப்படி தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி அட்டவணையை ெவளியிட்டு, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடும்.

இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை