தெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்!

தினமலர்  தினமலர்
தெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்!

அவிநாசி,தெரு வியாபாரிகளை ஒருங்கிணைத்து, சங்கம் அமைக்க வேண்டும்' என்ற அரசு உத்தரவை, நடைமுறைப்படுத்த முடியாமல், உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
தமிழ்நாடு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரம் முறைப்படுத்துதல் திட்ட விதி, 2015ன்படி, மாநிலம் முழுக்க, உள்ளாட்சி சாலை மற்றும் நெடுஞ்சாலையோரம் கடை விரித்து வியாபாரம் செய்து வரும், தெரு வியாபாரிகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.வியாபாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, வியாபாரத்தை வகைப்படுத்துவது, அடையாள அட்டை வழங்குவது, பரப்பளவுக்கு ஏற்ப வியாபார கட்டணம் விதிப்பது, சான்றிதழ் ரத்து செய்வது, மாற்றிடம் ஒதுக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்புபணி நிறைவடைந்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, 'தெரு வியாபாரிகளை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்து, அவர்களுக்குள் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; ஆனால், இப்பணி மேற்கொள்ளப்படவில்லை.இது குறித்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:தெரு வியாபாரிகளை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல; அவர்களில், 80 சதவீதம் பேர், பல்வேறு அரசியல் கட்சி சார்புடையவர்களாக உள்ளனர்.
ஒருவரே, தங்களது உறவினர்கள் பெயரில், ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை வைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.உள்ளூர் அரசியல் கட்சியினர் பலர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டப்பட்ட பலருக்கு தெருவில் கடை வைக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளனர்.அவர்களிடம் இருந்து, தினசரி குறிப்பிட்ட அளவு 'கமிஷன்' என்ற அடிப்படையில் வசூலித்து கொள்கின்றனர். எனவே, சங்கம் அமைத்து செயல்படும் போது, கண்டிப்பாக அதில் அரசியல் தலையீடு இருக்கும்; இது, தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தும்; குழப்பத்தில் உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை