ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை!

தினமலர்  தினமலர்
ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை!

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் சென்று, திரும்பியவர்களிடம், வழக்கம் போல, ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை அடிக்கப்பட்டது. போக்குவரத்து துறையின் அதிரடி நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளில், ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கூறிய நிலையில், பொங்கலுக்கு வசூல் வேட்டை நடந்துள்ளது.
சென்னையில், கல்வி மற்றும் பணி நிமித்தமாக தங்கி உள்ள, லட்சக்கணக்கான மக்கள், பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.அந்நேரங்களில், ரயில்களில் டிக்கெட் கிடைக்காத காரணத்தால், பயணியர் ஆம்னி பேருந்துகளை நாடுவது வழக்கம்.இதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள், வழக்கமாக வாங்கும் கட்டணத்தை விட, இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.பண்டிகை நாட்களில், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை, சொந்த ஊருக்கு செல்வதை வெறுத்து போக செய்யும் அளவிற்கு இருக்கும்.
இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுவதும், அப்போதெல்லாம், 'அதிக கட்டணம் வசூலிக்கும், ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு அறிவிப்பதும் வாடிக்கை.இதற்காக, கண்துடைப்பாக சில ஆம்னி பேருந்துகளை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், கொள்ளை தொடர்ந்து நடக்கிறது.இம்முறை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு கவுன்டர் திறந்து வைத்த, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''மூன்றாண்டு தொடர் நடவடிக்கையால், ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் வசூலிப்பது குறைந்துள்ளது.
''அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூறியிருந்தார்.ஆனால், பொங்கல் பண்டிகையின் போது, ஆம்னி பேருந்துகள், அடாவடி கட்டணம் வசூல் செய்தன. ஆன்லைன் டிக்கெட்டிலேயே, வெளிப்படையாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.நேற்றும், நேற்று முன்தினமும் சொந்த ஊர்களில் இருந்து, சென்னைக்கு திரும்பிய பயணியரிடம், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மதுரை - சென்னைக்கு, 1,300 - 1,500 ரூபாய் வரையிலும்; திருநெல்வேலி -- சென்னைக்கு, 1,300 - 1,900 ரூபாய் வரையிலும்; திருவனந்தபுரம் -- சென்னைக்கு, 1,300 - 2,200 ரூபாய் வரையிலும், கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில், ஆம்னி பேருந்துகளை, வெளியூர் பயணியர் நாடி செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.வீடு, சொந்தங்களை விட்டு சென்னையில் பணிபுரிவோருக்கு, பண்டிகை நாட்களில் தான், சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.அந்த நேரம் காசு, பணத்தை பார்க்க முடியாது.
அதை பயன்படுத்தி, கட்டண கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது.ஓடும் ஆம்னி பேருந்துகளில், 50 சதவீதம், ஆளும்கட்சியினருக்கும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் சொந்தமானவை.இதனால், அதிக கட்டணம் வசூலித்தால், பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தொடரும் கட்டண கொள்ளைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியமில்லை என்பது தான் உண்மை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்டணம் நிர்ணயிப்பதில் சிக்கல்!
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆம்னி பேருந்துகளுக்கு என, தமிழகத்தில், குறிப்பிட்ட வழித்தடத்திற்கான அனுமதி எதையும், அரசு வழங்கவில்லை. அவை, வாடகை அடிப்படையில், குழுவாக உள்ளவர்களை, ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு, ஏற்றி இறக்கும் அனுமதியை மட்டுமே, அரசு வழங்கி உள்ளது.அதனால், அவற்றின் வாடகை விஷயத்தில், எந்த சட்ட திட்டமும் நம்மிடம் இல்லை. என்றாலும், வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, எவ்வளவு கூடுதலாக வசூலிக்கின்றனர் என்பது குறித்து, பயணியர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மட்டும் தான், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால், பெரும்பாலான பயணியர், பயணம் முடிந்த பின் தான், புகார் அளிக்கின்றனர்.
காரணம், பயணம் தடைபட்டு விடும் என்ற அச்சம். அதனால், எங்களால், உரிய நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.எல்லா பேருந்து நிறுவனங்களும், ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிப்பதில்லை. அவற்றில் உள்ள இருக்கை, படுக்கை வசதிகளின் அடிப்படையிலும், புறப்படும் நேரம், சேரும் நேரத்தின் அடிப்படையிலும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர்.இந்த ஆண்டு, அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கிய போதும், பொதுமக்களில் பலர், ஆம்னி பேருந்துகளில் பயணித்ததை காண முடிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.1,069 பேருந்துகளுக்கு, 'நோட்டீஸ்'ஜன., 11ம் தேதி முதல், 21ம் தேதி வரை, போக்குவரத்து அதிகாரிகள், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை குறித்து, தொடர் சோதனை நடத்த, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், 17ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், 1,069 ஆம்னி பேருந்துகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் வழியாக, 21.69 லட்சம் ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், 1.43 லட்சம் ரூபாய், வரியாக பெறப்பட்டுள்ளது. பயணியர் அளித்த புகார்களின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான பயணியருக்கு, கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை திருப்பி செலுத்த மறுத்தது; பர்மிட் முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்டவற்றிற்காக, சென்னையில், ஒன்று; விழுப்புரம், கோவை, சேலத்தில் தலா, இரண்டு என, மொத்தம், ஏழு ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.'- நமது நிருபர் -

மூலக்கதை