ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தொடங்கிய இந்திய அணி , முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து நடந்த மிகக் கடினமான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்றது. ஷங்கர் அறிமுகம்: டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் அறிமுக வீரராக இடம் பெற்றார். ராயுடு, குல்தீப் நீக்கப்பட்டு கேதார், சாஹல் இடம் பெற்றனர். ஆஸி. அணியில் பெஹரன்டார்ப், நாதன் லயனுக்கு பதிலாக ஸ்டான்லேக், ஆடம் ஸம்பா சேர்க்கப்பட்டனர். மழை காரணமாக ஆட்டம் தொடங்க சற்று தாமதமானது. அலெக்ஸ் கேரி, கேப்டன் பிஞ்ச் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். கேரி 5 ரன், பிஞ்ச் 14 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஆஸி. அணி 9 ஓவரில் 27 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. மார்ஷ் 39 ரன், கவாஜா 34 ரன் எடுத்து சாஹல் வீசிய 24வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 10 ரன் எடுத்து சாஹல் சுழலில் மூழ்க, மேக்ஸ்வெல் 26 ரன் எடுத்து (19 பந்து, 5 பவுண்டரி) ஷமி வேகத்தில் புவனேஷ்வரிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், ஹேண்ட்ஸ்கோம்ப் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். ரிச்சர்ட்சன் 16 ரன், ஹேண்ட்ஸ்கோம்ப் 58 ரன் எடுத்து (63 பந்து, 2 பவுண்டரி), சாஹல் பந்துவீச்சில் பலியாகினர். ஆடம் ஸம்பா 8 ரன்னில் வெளியேற, ஸ்டான்லேக் டக் அவுட்டானார். ஆஸ்திரேலியா 48.4 ஓவரிலேயே 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிடில் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.சாஹல் அசத்தல்: இந்திய பந்துவீச்சில், சாஹல் 10 ஓவரில் 42 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. புவனேஷ்வர், ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 9 ரன் எடுத்து சிடில் வேகத்தில் ஷான் மார்ஷ் வசம் பிடிபட்டார். தவான் 23 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கோஹ்லி - டோனி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. கோஹ்லி 46 ரன் எடுத்து (62 பந்து, 3 பவுண்டரி) ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேரியிடம் பிடிபட்டார். அடுத்து டோனியுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். கடைசி 20 ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 118 ரன் தேவைப்பட்ட நிலையில், இந்த ஜோடி உறுதியுடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்ததுடன் அணியை வெற்றிப் பாதையில் வழிநடத்தினர். இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து வெற்றியை வசப்படுதியது. டோனி 87 ரன் (114 பந்து, 6 பவுண்டரி), கேதார் 61 ரன்னுடன் (57 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடப்பு ஆஸி. சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றிருந்த இந்திய அணி, இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரையும் முதல் முறையாக வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்தது. 6 விக்கெட் கைப்பற்றிய சாஹல் ஆட்ட நாயகன் விருதும், தொடர்ச்சியாக 3 அரை சதங்களை விளாசிய டோனி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

மூலக்கதை