விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்

தினமலர்  தினமலர்
விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வெகுவாக குறைக்கப்பட்டு ஓராண்டு ஆன பிறகும், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்காமல், உணவுப் பண்டங்கள் விலையை குறைக்காமல், ஓட்டல்கள் ஏமாற்றுவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இது குறித்து, லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த, 2017, ஜூலை 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது முதல், இந்தாண்டு, ஜன.,1 வரை, ஐந்து முறை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., கவுன்சில், 2017, நவம்பரில், உணவகங்களுக்கான வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்தது. இது போன்ற, பல்வேறு பொருட்களுக்கு வரி குறைப்பால் கிடைத்த பயனை, நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவுறுத்தியது.

நடவடிக்கை:
அதன்படி, பொருட்கள் விலையை குறைக்காத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2018, அக்டோபரில், ஜி.எஸ்.டி., குறைப்பால் பெற்ற பயன் குறித்து, நுகர்வோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட பின்னும், ஓட்டல் நிர்வாகங்கள், உணவுப் பண்டங்கள் விலையை குறைக்கவில்லை என்பதால், தாங்கள் பயனடையவில்லை என, 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இது, இம்மாதம் மேற்கொண்ட ஆய்வில், 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வில், 29 சதவீதத்தினர் மட்டுமே, ஓரளவு பயன் பெற்றதாக தெரிவித்துள்ளனர். ஷாம்பூ, மளிகை உள்ளிட்ட நுகர்பொருட்கள் விலை குறையவில்லை என, 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனினும், இது, கடந்த ஆண்டு, ஜூன், அக்டோபர் காலத்தை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில், 'டிவி', பிரிஜ் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களில், வரி குறைப்பின் பயன் கிடைக்கவில்லை என, தெரிவித்தோர் சதவீதம், 47லிருந்து, 38ஆக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வேண்டும்:
ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால் மட்டுமே, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, நுகர்வோர் நல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை