தி.மு.க., ஏற்பாடு செய்த நாடகம் கோடநாடு குறித்து முதல்வர் ஆவேசம்

தினமலர்  தினமலர்
தி.மு.க., ஏற்பாடு செய்த நாடகம் கோடநாடு குறித்து முதல்வர் ஆவேசம்

சென்னை: ''மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன். கோடநாடு கொள்ளை வழக்கில், தவறான கருத்தை, என் மீது சுமத்துகின்றனர்; அதை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவேன்,'' என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில், 4.83 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நகராட்சி கட்டடம் உள்ளிட்ட, பல்வேறு கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை திறந்து வைத்தார். பின், அ.தி.மு.க., சார்பில், காட்டுப்பாக்கத்தில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

என் மீது வழக்கு போடுகின்றனர். எதற்கும் பயப்பட மாட்டேன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை, கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். எனக்கு எதிராக, எதை எதையோ செய்து பார்த்தனர். இப்போது, மிரட்டி பார்க்கின்றனர். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். நீலகிரி மாவட்டம், கோடநாடு கொள்ளை வழக்கில், ஒரு தவறான கருத்தை, என் மீது சுமத்துகின்றனர். எந்த அளவிற்கு துணிந்துள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். பொய் சொன்னாலும், பொருந்த சொல்ல வேண்டும். கட்டுக்கதையை அவிழ்த்து விடுகின்றனர்.

கோடநாடு கொள்ளையில் ஈடுபட்ட, கூலிப்படையை சேர்ந்தவர்கள் மீது, கேரளாவில் பல வழக்குகள் உள்ளன. அவர்களை, தி.மு.க.,வினர் ஜாமினில் எடுத்துள்ளனர். கொள்ளையர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் என்ன சம்பந்தம்; குற்றம் புரிந்தவர்களோடு, தி.மு.க.,விற்கு தொடர்பு உள்ளது. இது, தி.மு.க.,வால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். இதை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவேன். உண்மை, நீதி எப்போதும் வெல்லும்; துரோகம் வெல்லாது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

மூலக்கதை