அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா

PARIS TAMIL  PARIS TAMIL
அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா

சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

 
இன்று நடைபெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, இத்தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இத்தொடரில் முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், சமநிலைப் பெற்றிருந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில், இன்றைய தினம் மெல்பேர்ன் மைதானத்தில் இரு அணிகளும் களம் கண்டன.
 
அவுஸ்ரேலியா மைதானங்களை பொறுத்தவரை, வெற்றியை தீர்மானிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நாணய சுழற்சியே.
 
ஆகையால் இப்போட்டியில் முதல் சாதகமான துருப்புடன், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் அவுஸ்ரேலியா அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
 
இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 48.4 ஓவர்கள் நிறைவில் 230 ஓட்டங்களுக்கு சுருண்டது.
 
அவுஸ்ரேலியா அணியை, குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால்.
 
முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்துக்கொள்ளப்படாத இவர், தீர்க்கமான இன்றைய போட்டியில் சாதிப்பார் என்ற நம்பிக்கையுடன் களமிறக்கப்பட்டிருந்தார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், அவர் 10 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
 
மேலும், இவருக்கு உதவிகரமாக வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதன்போது மறுபுறம் அவுஸ்ரேலியா அணி சார்பில், பீட்டர் ஹோண்ட்ஸ்கொம், அதிகபட்ச ஓட்டமாக 58 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
இதனையடுத்து, 231 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
 
ஆரம்ப துடுப்பாட்ட வீரான ரோஹித் சர்மா ஐந்தாவது ஓவரின் இறுதி பந்தில், 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார்.
 
பின்னர், களத்தை நன்கு அறிந்துகொண்ட அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.
 
எனினும் குறித்த ஜோடி துடுப்பெடுத்தாடும் போது, இந்த இணைப்பாட்டத்தை பிரிப்பதற்கு அவுஸ்ரேலியா அணிக்கு நான்கு வாய்ப்புகள் கிடைத்தன. நான்கு வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டு ஐந்தாவது வாய்ப்பிலேயே கோஹ்லி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
இதன்பிறகு களமிறங்கிய கேதர் ஜாதவ், டோனியுடன் ஜோடி சேர்ந்தார். இவரும் இணைந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி அணிக்காக 121 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்ததோடு, அணியின் வெற்றிக்கும் துணைநின்றனர்.
 
இதன்போது இன்றைய தினமும் அரை சதம் விளாசிய டோனி, இந்த தொடரில் தொடர்சியான 3வது அரை சதத்தினையும் பூர்த்தி செய்ததோடு, ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இப்போட்டித்தொடரின் நாயகனாகவும் மகேந்திர சிங் டோனி தெரிவுசெய்யப்பட்டார். கேதர் ஜாதவ் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
 
இறுதியில் இந்தியா அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்த இந்தியா அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.

மூலக்கதை