சமூக நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிச்சுமை! காலிப்பணியிடம் நிரப்புவதில் மெத்தனம்

தினமலர்  தினமலர்
சமூக நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிச்சுமை! காலிப்பணியிடம் நிரப்புவதில் மெத்தனம்

திருப்பூர்:சமூக நல பாதுகாப்பு பிரிவு அலுவலகங்களில், பணிச்சுமையால், அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 62 ஆயிரத்துக்கும் அதிகமான பயனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்டம், நலிந்தோர் நல உதவி திட்டம் உட்பட, பல அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், முதிர் கன்னியர், விதவைகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு, இத்துறை மூலம் பல உதவி வழங்கப்படுகிறது.இப்பணிகளை மேற்கொள்ள தனி தாசில்தார், முதுநிலை உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர் என, ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அதிகாரம் பெற்ற அலுவலருக்கு, களப்பணிக்கு உதவியாக அரசு வாகனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற இத்துறையில், அதன் பணிகளை வேகப்படுத்த பணியாளர் பற்றாக்குறை தடையாக உள்ளது. சில தாலுகாக்களில் செயல்படும், சமூக நலத்துறை பிரிவில் தாசில்தார் உட்பட ஓரிரு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். பெருமளவு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் செய்ய வேண்டியிருப்பதால், அன்றாட அலுவல் பணிகளை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதுமானதாக இல்லை.

சமூக நலத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,'பணியாளர் பற்றாக்குறையை தவிர்க்க, தாலுகா வாரியாக கலந்தாய்வு நடத்தி, ஒவ்வொரு பணியாளரும், குறிப்பிட்ட காலம், சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் பணியாற்றும் வகையில், விதிமுறை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.குறிப்பாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் இரு பணியாளராவது இருக்கும் வகையில், பணி நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மூலக்கதை