வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை

தினமலர்  தினமலர்
வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை

புதுடில்லி : வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர், ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டில்லியில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸை, தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது குறித்து, இந்திய தொழிலக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை, 50 சதவீதம் குறைத்தால், பணப்புழக்கம் பெருகும்.இத்துடன், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.50 சதவீதம் குறைத்தால், தொழில் துறைக்கு தாராளமாக கடன் வழங்க முடியும். இதனால், குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறை பயன் பெறும்.

சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கைகளை, பிப்., 7ல், கூடும், ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு அறிவிக்கலாம் என, கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைகள் சந்தித்த நிதிச் சவால்களுக்கு தீர்வு காண, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளுக்கு, தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கடனுக்கான பிணை விதிமுறைகளை தளர்த்தினால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேலும் ஊக்கப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை