மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது

தினமலர்  தினமலர்
மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘பெல்’ என, சுருக்கமாக அழைக்கப்படும், பாரத கனரக மின் நிறுவனம், டில்லி – சண்டிகர் இடையே, மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்களை அமைக்க உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லி – சண்டிகர் இடையிலான, 250 கி.மீ., நெடுஞ்சாலையில், ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில், மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள், பசுமை திட்டத்தின் கீழ், சூரிய சக்தி மூலம் வாகனங்களுக்கு மின் சப்ளை செய்யும்.மின்சார வாகனங்களை துரிதமாகவும், மெதுவாகவும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக, இந்த மையங்கள் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, மின் வாகன தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் மின் வாகன சார்ஜ் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.பெல் நிறுவனம் ஏற்கனவே, டில்லி, உத்யோக் பவனில், பாரம்பரிய முறையில், மின் வாகன சார்ஜ் மையம் அமைத்துள்ளது. இது போல, நாடு முழுவதும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை