இந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம்

தினமலர்  தினமலர்
இந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம்

புதுடில்லி : இந்திய அகர்பத்திகள் இறக்குமதிக்கு விதித்த தடையை, இத்தாலி நீக்கியுள்ளது. இதனால், இத்தாலி உட்பட, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, அகர்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழி பிறந்துள்ளது.

இந்திய அகர்பத்திகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல், ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு, இத்தாலி தடை விதித்தது.தீர்வுஇதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, இத்தாலி அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான இத்தாலி துாதர், லோரன்ஸோ ஆஞ்ஜலோனி, சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதம்: இத்தாலி அரசும், துாதரக அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கையால், அகர்பத்தி தொடர்பான சிக்கலான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியா, இனி இத்தாலிக்கு, அகர்பத்திகளை ஏற்றுமதி செய்யலாம். இது, ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவு சாராத, அதேசமயம் அபாயகரமான பொருட்கள் குறித்த விபரங்களை, ‘ரேபெக்ஸ்’ என்ற தரவு தொகுப்பு மூலம் ஐரோப்பிய நாடுகள் பரிமாறிக் கொள்கின்றன.

இதில், இத்தாலி விதித்த தடையால், இந்திய அகர்பத்தியும் சேர்க்கப்பட்டிருந்தது.அதனால், இத்தாலி மட்டுமின்றி, இதர ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா, அகர்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்தது.நிபந்தனைதற்போது, இந்திய அகர்பத்தி இறக்குமதிக்கு விதித்த தடையை இத்தாலி நீக்கியுள்ளதால், ரேபெக்ஸ் பட்டியலில் இருந்தும், இந்திய அகர்பத்தி அகற்றப்பட்டுள்ளது.

அதனால், இந்தியா இனி ஐரோப்பிய நாடுகளுக்கும் அகர்பத்திகளை ஏற்றுமதி செய்யலாம். அதேசமயம், அகர்பத்தி பெட்டிகளின் அட்டையில், விழிப்புணர்வு பிரசாரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.அதில், ‘அகர்பத்திகளை தொடர்ந்து கொளுத்தக் கூடாது; காற்றோட்டமான அறையில் தான் பயன்படுத்த வேண்டும்’ என, நுகர்வோரின் ஆரோக்கிய நலன் சார்ந்த வாசகங்கள் இடம் பெற வேண்டும்.இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியா, அகர்பத்திகளை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யலாம். இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை, இத்தாலி அரசின் பொருளாதார மேம்பாட்டுத் துறை, விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.

அத்துடன், புதிதாக கொண்டு வரப்படும் இந்திய அகர்பத்திகளை, எல்லையோர காவல் துறையினர் பறிமுதல் செய்வதை தடுப்பதற்கான ஆணையும் பிறப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில், அகர்பத்தி தயாரிப்பது, குடிசை தொழிலாக உள்ளது. இத்தாலி அரசின் தடை நீக்கத்தால், இத்தொழில் சூடு பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அகர்பத்தி தொடர்பாக, இத்தாலி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. கடந்த, 2018, ஏப்ரல் – நவம்பரில், இந்தியா, 460 கோடி ரூபாய் மதிப்புள்ள அகர்பத்திகளை ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில், இந்திய அகர்பத்திகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள், நவீன இயந்திரங்கள் மூலம் அகர்பத்திகளை தயாரிப்பதால், இந்தியாவுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகின்றன.
-ராகேஷ் குமார், செயல் இயக்குனர், கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்

மூலக்கதை