பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தினகரன்  தினகரன்
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழக கர்நாடக எல்லை பகுதியில் கடத்த 1998ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது புகார் எழுந்தது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. இந்த தீர்ப்பின் காரணமாக அதிமுக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இழக்க நேர்ந்தது. இதையடுத்து, நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை