பட்டி பெருக... பால் பெருக!மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம் : உற்சாகம் குறையாத கொண்டாட்டம்

தினமலர்  தினமலர்
பட்டி பெருக... பால் பெருக!மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம் : உற்சாகம் குறையாத கொண்டாட்டம்

திருப்பூர்:திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது; விவசாயிகளின் உற்ற தோழனாக உழைக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தை பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, உழவுக்கு தோள் கொடுக்கும் பசு,காளை, எருமைகளை போற்றும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வோடு ஒன்றிப்போன அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நேற்று, மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.திருப்பூர், அவிநாசி, பல்லடம், கொடுவாய், தாராபுரம், ஊத்துக்குளி சுற்றுப்பகுதிகளில் விழா களைகட்டியது. இந்தாண்டு மழை கை கொடுத்ததால், கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும், மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடினர்.மாடுகள் கட்டி வைக்கப்படும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டன; கால்நடைகள் குளிப்பாட்டி சுத்தம் செய்யப்பட்டன. மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூர்கொம்பில் குஞ்சம், சலங்கை போன்றவற்றை கட்டி விடப்பட்டன.அவற்றின், கழுத்துக்கு வார் பட்டையில் சலங்கை கட்டியும், புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும், அழகு பார்த்தனர். மாடுகளின் நெற்றியில், திருநீறு பூசி குங்கும பொட்டிட்டும் மகிழ்ந்தனர்.மாட்டுத்தொழுவத்தில், சிறிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து, சர்க்கரை பொங்கல், கரும்பு, முறுக்கு உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. சொந்த, பந்தங்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, பொங்கல் வைத்து, குடும்ப உறவு போற்றினர். மாடுகளுக்கு சாம்பிராணி துாபம் போட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனர்.கறவை மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து, சுற்றி வந்து வணங்கினர். கரும்புத்துண்டு, முறுக்கு மறறும் வாழைப்பழம் கட்டிய சரத்தை, மாடுகளின் கொம்பில் கட்டிவிட்டு, முடக்கத்தான் கொடியில் தயாரிக்கப்பட்ட கயிற்றை தாண்டி ஓடும் வகையில், மாடுகள் விரட்டப்பட்டன.விவசாயிகள் கூறுகையில்,'மாட்டுப்பொங்கல் வழிபாடின் போது, சிறிய குளத்தில் இருந்து, மாடுகள் துள்ளிக்குதித்து ஓடுவதால், பட்டி பெருகி, பால் பானை நிரம்பும் என்பது நம்பிக்கை. விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் காளைகள் மற்றும் கறவை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அத்துடன், பால் வளம் பெருக வேண்டுமென, கோமாதா பூஜை செய்து வழிபடுகிறோம்' என்றனர்.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, குஞ்சம் கட்டி அலங்கரிக்கப்பட்டன.மாட்டுத் தொழுவத்தில், தெப்பக்குளம் அமைத்து, சர்க்கரை பொங்கல் வைத்து மாடுகளை வழிபட்டனர். மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு படைக்கப்பட்டது. பட்டாச்சார்யார்கள், சிறப்பு பூஜைகள் செய்து, கோமாதா பூஜை நடத்தினர்.

மூலக்கதை