டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கிவைக்க மாட்டார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎம்எஸ்  வண்ணாரப்பேட்டை இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கிவைக்க மாட்டார்

சென்னை : டி. எம். எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை 27ம் தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க மாட்டார் என மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் 45 கி. மீட்டர் தூரத்திற்கான முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கி. மீ சுரங்கப்பாதை வழித்தடத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

தற்போது, ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சேவை இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், வரும் 27ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அங்கு அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதேபோல், சென்னைக்கு வந்து டி. எம். எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ வழித்தட சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால், இந்த வழித்தட சேவையை பிரதமர் தொடங்கிவைக்க மாட்டார் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: மதுரைக்கு 27ம் தேதி வரும் பிரதமர் மோடி டி. எம். எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வழித்தட சேவையை தொடங்கி வைக்கும் திட்டம் எதுவுமில்லை. அவர் வந்து சென்றதற்கு பிறகே இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கப்படும்.

குறிப்பாக, 28ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் இந்த வழித்தடத்தில் கண்டிப்பாக சேவை தொடங்கப்படும். இதற்கு முழு முயற்சியையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இதேபோல், வரும் 19ம் தேதி பாதுகாப்பு ஆணையர் சென்னைக்கு வருகிறார். அவர் 19, 20ம் தேதிகளில் ஆய்வு செய்வார்.

பின்னர், அவரின் ஒப்புதல் கிடைத்த பிறகே சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை