ரூ.7 கோடி! பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை...குடிமகன்களுக்காக இருப்பை தயார்படுத்திய அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
ரூ.7 கோடி! பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை...குடிமகன்களுக்காக இருப்பை தயார்படுத்திய அதிகாரிகள்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பொங்கல் பண்டிகையன்று மட்டும் 7 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. காணும் பொங்கலான நேற்று விற்பனை 2 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசுக்கு வருவாய் தரக் கூடிய துறைகளில் அரசு டாஸ்மாக் கடைகள் தான் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 225 கடைகள் செயல்பட்டு வந்தன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் முழுவதும் அகற்றப்பட்டன.அதனால் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 80ஆக குறைந்தது. கடைகள் எண்ணிக்கை குறைந்தாலும் விற்பனை பெரிய அளவில் குறையாமல் அதே நிலையில் நீடித்து வந்தது. ஒரு கடையை அப்புறப்படுத்தினால் அந்த கடையின் வியாபாரம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகரிக்கிறது.இருப்பினும் அதிகாரிகளின் முயற்சியால் தற்போது படிப்படியாக உயர்த்தி இம் மாவட்டத்தில் 138 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1.50 கோடி ரூபாய்க்கு குறையாமல் விற்பனை நடந்து வருகிறது. மதுபாட்டில்கள் விற்பனை தீபாவளி பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் அதிகளவு மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.தமிழர்களின் பண்டிகைகளில் தீபாவளிக்குத்தான் அதிகளவு மது விற்பனை என்கிற இலக்கை எட்டி இருந்தது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறையை கணக்கில் கொண்டு விற்பனையை அதிகரிக்க, டாஸ்மாக் அதிகாரிகள், குடிமகன்கள் விரும்பி குடிக்கும் அனைத்து பிராண்டுகள், பீர்கள் இல்லையென்று சொல்லாமல் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்புவதற்கு இருப்பை தயார்படுத்தினர்.கடந்த 12ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடுப்பட்டுள்ளது. பருவ மழை, நெல் அறுவடை, தமிழக அரசின் பொங்கல் பரிசு ஆகியவற்றால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.கடந்த ஆண்டு 13ம் தேதி 3.39 கோடி; 14ம் தேதி 5.74 கோடி; 15ம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டது.இந்த ஆண்டு 13ம் தேதி 3.22 கோடி; 14ம் தேதி 3.83 கோடி; 15ம் தேதி 6.64 கோடியை எட்டியுள்ளது. இந்த விற்பனை நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் சராசரி தொகையை விட 4 மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 16ம் தேதி காணும் பொங்கலன்று 5.29 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.நேற்று முன்தினம் மாட்டு பொங்கலன்று திருவள்ளுவர் தினம் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டது. காணும் பொங்லான நேற்று டாஸ்மாக் கடைகளில் காலை முதல் குடி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அதனால் நேற்று விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை