‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் பாகிஸ்தானில் நாளை ரிலீஸ்

தினகரன்  தினகரன்
‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் பாகிஸ்தானில் நாளை ரிலீஸ்

மும்பை : சர்ச்சைக்குரிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளால், அப்படம் நாளை அந்நாடு முழுவதும் ரிலீஸ் ஆகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டு கால ஆட்சி குறித்து இந்தப் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ‘இந்தப் படம் காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது’ என்று அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் படம் வெளியாகக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்துக்கு எதிராக சுதிர் குமார் ஓஜ்ஹா என்ற வழக்கறிஞர் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவில், ‘படத்தின் ட்ரைலரை தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்பில் பார்த்து மனவருத்தமடைந்தேன். அந்தப் படம், இந்தியா மற்றும் இந்திய அரசியல் தலைவர்களான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இழிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதி, மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கேர் மற்றும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டத் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படம் திரையிடுவதற்கான வேலைகள் நடந்தது. அந்நாட்டு அரசாங்கம், சென்சார் போர்டுக்கு திரைப்பட தயாரிப்பு குழு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதுகுறித்து, ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயத்லால் காடா கூறுகையில், ‘‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கும், அந்நாட்டு சென்சார் போர்டுக்கும் நன்றி. ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் போர்டு தடையில்லா சான்று வழங்கியுள்ளதையடுத்து நாளை (ஜன. 18) அந்நாட்டில் ரிலீஸ் ஆகிறது’’ என்றார்.

மூலக்கதை