HAL நிறுவனம் தயாரித்த வானில் பறந்தவறே இலக்கை தாக்கும் போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றி

தினகரன்  தினகரன்
HAL நிறுவனம் தயாரித்த வானில் பறந்தவறே இலக்கை தாக்கும் போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றி

பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த குறைவான எடையுடைய போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றியடைந்தது. ஆகாயத்தில் பறந்தவாறே ஏவுகணையை செலுத்தி இலக்குகளை தகர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தனித்திறன் வாய்ந்த இந்த ஹெலிகாப்டர் இந்திய ராணுவத்தில் விரைவில் இணைகிறது. பெங்களூரில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ், புதிய இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்து உள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டரின்  தாக்குதல் திறன், போர்களத்தில் அதன் செயலாற்றல் ஆகியவற்றை பரிசோதித்து பார்க்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் நடைபெற்றது. விண்ணில் பறந்தபடியே, விண்ணில் நகரும் மற்றொரு இலக்கை நோக்கி ராக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது.விமானப்படையின் அதிகாரிகளான சுபாஷ் பி ஜான், ரஞ்சித் சித்தலே, ஹெச் ஏ.எல் நிறுவன என்ஜினீயர் ராஜீவ் துபே ஆகியோர் ஹெலிகாப்டரில் பறந்தபடியே பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது விண்ணில் உள்ள நகரும் இலக்கு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டது. இதன் மூலம் இலகு ரக ஹெலிகாப்டரின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஹெச்.ஏ.எல் நிறுவன தலைவர் ஆர்.மாதவன் கூறியுள்ளார். இந்த புதிய இலகு ரக ஹெலிகாப்டர் தான் நாட்டிலேயே முதல் முறையாக விண்ணில் பறந்தபடி விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட குண்டுகளை சுடும் துப்பாக்கியையும், 70 மி.மீட்டர் விட்டம் கொண்ட ராக்கெட்களையும் ஹெலிகாப்டர் கொண்டுள்ளது.இமயமலையில் உள்ள 20, 000 அடி உயரம் கொண்ட சியாசின் பனிமலை பரப்பிலும் பறந்து தாக்கும் திறன் இலகு ரக ஹெலிகாப்டருக்கு உள்ளது. விமானியின் கண்ணுக்கு முன்னால் உள்ள திரையிலேயே எதிரி இலக்கை காட்டும் நவீன தொழில் நுட்பம், அகச்சிவப்பு கதிர் மூலம் இரவிலும் இலக்கை காட்டும் தொழில் நுட்பம் ஆகியவையும் ஹெலிகாப்டரில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இலக்கு எங்கிருந்தாலும் தேடி அழிக்க முடிவதோடு, இலக்கு இருக்கும் இடத்தை நோக்கி ஹெலிகாப்டரை திருப்பாமல் தாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது. மேலும் மிக குறைந்த உயரத்திலும் பறந்து தாக்கும் திறனுடன், துல்லிய தாக்குதல் வல்லமையும் கொண்டுள்ள ஹெலிகாப்டரை வாங்க ராணுவமும், விமானப்படையும் முன்வந்துள்ளன. இதன் படி விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்திற்கு 5 ஹெலிகாப்டர்களும் முதற்கட்டமாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை