அமெரிக்க பார்லி., குழுவில் இந்தியர்

தினமலர்  தினமலர்
அமெரிக்க பார்லி., குழுவில் இந்தியர்

வாஷிங்டன்: இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, உளவுப்பிரிவு சார்ந்த பார்லிமென்ட் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான இந்த குழுவில் தெற்கு ஆசியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.

4 பேரில் ஒருவர்


45 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி இலினியாசிலிருந்து பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்டவர். நிரந்தர நுண்ணறிவுக்கான அவை தேர்வு குழுவுக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் வால் டெமிங்ஸ், சியோன் பாட்ரிக், பீட்டர் வெல்ச் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி பிறப்பித்துள்ளார்.

பெருமை


இது தொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:பார்லிமென்ட் நுண்ணறிவு குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பலத்திற்கு சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். அமெரிக்காவை தற்போது சந்திக்கும் சர்வதேச அச்சுறுத்தல் மற்றும் உளவுத்துறை சவால்கள் பெரிதாக உள்ளது. நமது ஜனநாயகத்தை தொடர்ந்து சீர்குழைக்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சபாநாயகர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு பெருமை அளிக்கிறது. குழுவுக்கு எனது பங்களிப்பை அளிப்பேன். நான் பொறுப்பேற்கும்போது,உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து அரசியல் சாசனத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை பாதுகாக்க உறுதி ஏற்பேன் என்றார்.

2வது நபர்


டில்லியில், தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி 3 மாத குழந்தையாக இருக்கும்போது நியூயார்க் சென்று குடியேறினார். பிரின்ஸ்டன் பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை முடித்த அவர், ஹார்வர்டு சட்ட பல்கலையிலும் படித்தார். கடந்த வாரம் இந்தியா வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபாலை கல்வி மற்றும் தொழிலாளர் குழுவில் நியமிக்கப்பட்டார்.

மூலக்கதை