நாளை தமிழகம் வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நாளை தமிழகம் வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி : நாளை தமிழகம் வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், கடந்தாண்டு, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ ஓய்விற்கு பின், தனது அமைச்சக பணிகளைத் தொடர்ந்து கவனித்து வந்த அருண்ஜெட்லி, வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக, செவ்வாய்க்கிழமையன்று, அருண்ஜெட்லி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஆதலால் இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நிலையில் கடந்த வாரம் பாஜக தலைமை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்தது.  அதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார்.  இவர் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் புதிய பொறுப்புகளின் காரணமாக பியூ​ஷ் கோயலின் தமிழக வருகை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை