சோகத்தில் பாண்ட்யா | ஜனவரி 16, 2019

தினமலர்  தினமலர்
சோகத்தில் பாண்ட்யா | ஜனவரி 16, 2019

மும்பை: ‘‘ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்த பின் ஹர்திக் பாண்ட்யா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. மகர சங்கராந்தி நாளில் பட்டம் விடும் மனநிலையிலும் இல்லை,’’ என, தந்தை ஹிமான்சு தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள்ஹர்திக் பாண்ட்யா,லோகேஷ் ராகுல் தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறானகருத்துகளை தெரிவித்தனர். இதனையடுத்து இவர்களை ‘சஸ்பெண்ட்’ செய்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரிலிருந்தும் திருப்பி அனுப்பியது.

இது குறித்து பாண்ட்யா தந்தை ஹிமான்சு கூறியது: ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்த பின், பாண்ட்யா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அடிலெய்டு ஒரு நாள் போட்டியை மட்டும் ‘டிவியில்’ பார்த்தார். அலைபேசியில் வந்த அழைப்பை கூட எடுக்கவில்லை. ஓய்வில் மட்டுமே இருந்தார். மகர சங்கராந்தி விழா என்பதால் எங்கள் குஜராத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எப்போதும், இந்த நாளில் பாண்ட்யா உற்சாகமாக பட்டம் விடுவார். கடந்த சில ஆண்டாக, தொடர் போட்டி காரணமாக இந்த விழாவின்போது வீட்டில் இருக்க முடியவில்லை. இம்முறை, வீட்டில் இருந்தபோதும் கொண்டாடும் மனநிலையில் பாண்ட்யா இல்லை.

‘டிவி’ நிகழ்ச்சியில் சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்தது குறித்து இவரிடம் எதுவும் கேட்கவில்லை. சகோதரர் குர்னால் பாண்ட்யாவும் இது குறித்து விவாதிக்கவில்லை. இந்திய கிரிக்கெட் போர்டின் அடுத்த கட்ட முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு ஹிமான்சு கூறினார்.

 

மூலக்கதை