உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நுாயி? டிரம்ப் கையில் இருக்கு, ‘டிரம்ப் கார்டு’

தினமலர்  தினமலர்
உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நுாயி? டிரம்ப் கையில் இருக்கு, ‘டிரம்ப் கார்டு’

புதுடில்லி: ‘பெப்ஸிகோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்குமா என்ற ஆவல், இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த சென்னைவாசிகளிடம் எழுந்துள்ளது.

உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம், இம்மாத துவக்கத்தில், திடீரென்று, பிப்ரவரியில் பதவி விலகப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி துவங்கியது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ, டிரம்பிற்கு அதிகாரம் உள்ளது.இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினரான, இவாங்கா டிரம்ப், உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார்.

‘இந்திரா நுாயி, ஓர் வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார்’ என, இவாங்கா டிரம்ப், ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார். இது குறித்து, இந்திரா நுாயி, உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அவரை, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

விமர்சனம்:
ஏனெனில், 2016ல், அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற போது, அதை, இந்திரா நுாயி கடுமையாக விமர்சித்தார்.டிரம்பின் தேர்வு, தன் மகள்கள் மற்றும் பெப்ஸிகோ ஊழியர்களிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அழுகையுடன், துக்கம் அனுஷ்டிப்பதாகவும், இந்திரா நுாயி கூறினார்.

‘இனி நாம் பாதுகாப்பாக வாழ முடியுமா?’ என, கறுப்பர்கள், பெண்கள், மாறுபாலினத்தோர் மனதில் கேள்வி எழுந்துள்ளதாகவும் இந்திரா நுாயி தெரிவித்தார்.

மறுப்பு:
இதற்கு, பெப்ஸிகோ ஊழியர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ‘அனைத்து ஊழியர்களும் அவ்வாறு நினைப்பதாக தாம் கூறவில்லை’ என, இந்திரா நுாயி மறுத்தார்.இத்தகைய கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட, இந்திரா நுாயியை, தன் மகள் பரிந்துரைத்த காரணத்தாலேயே, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா எனத் தெரியவில்லை.

இப்பதவிக்கு, இந்திரா நுாயி உடன், மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்காவின், சர்வதேச விவகாரங்களுக்கான கருவூலத் துறை கூடுதல் செயலர், டேவிட் மால்பாஸ் முக்கியமானவர். இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர். இவருடன், டிரம்பின் மற்றொரு விசுவாசி, ரே வாஷ்பர்ன் பெயரும், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் யார் வெல்வார் என்பது, இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும்.

மூலக்கதை