கேள்விக்குறி! கடலூரில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் பயன்பாடு...பெரும் தொகையை செலவழித்ததால் தள்ளாடும் நகராட்சி

தினமலர்  தினமலர்
கேள்விக்குறி! கடலூரில் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் பயன்பாடு...பெரும் தொகையை செலவழித்ததால் தள்ளாடும் நகராட்சி

கடலுார்:கடலுார் நகரில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பல கோடிகளை நகராட்சி செலவழித்தும் இன்னமும் முழுமை பெறாமல் உள்ளது.கடலுார் பெருநகராட்சியில் கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, 40 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பிரச்னை, நிதி பற்றாக்குறை, நிர்வாக கோளாறு என 9 ஆண்டுகளாக நிறைவேறாமல் இழுத்து வந்ததால் திட்ட மதிப்பீடு 60 கோடி ரூபாயாக உயர்ந்தது.2016 சட்டசபை தேர்தலுக்கு முன் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் ஜெ., காணொளி காட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது சோதனை கட்டமாக ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டது.கடலுார் நகரில் 35 வார்டுகளில் இந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வீடுகளுக்கான கழிவு நீர் இணைப்புகளை நகராட்சியே 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கி வருகிறது.இந்த தொகையை நகராட்சி 5 தவணைகளாக பயனாளிகளிடம் இருந்து பிடித்துக் கொள்கிறது. இதன்காரணமாக நகர பகுதியில் தற்போதுதான் 50 சதவீத இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை சொற்ப அளவில் இருந்த இணைப்புகளால் பம்ப் செய்யப்படும் மோட்டார்கள் பிரச்னையில்லாமல் இருந்தது.அதிகளவு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதிக திறனுள்ள மோட்டார் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கழிவு நீரை சரிவர பம்ப் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவழித்த இந்த திட்டம் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.கூட்டுக்குடிநீர் திட்டம்மாவட்டத்தின் கடலோர பகுதி உவர் நீராகி வருவதால் 256 கோடி ரூபாய் செலவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் எய்யலுாரில் இருந்து கொள்ளிடம் தண்ணீர் எடுக்கப்பட்டு 812 கிராமங்களுக்கு சப்ளை செய்யப்பட வேண்டும். 97 கி.மீ., துாரம் பயணித்து கடைசியில் உள்ள கடலுார் நகருக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.அவசர அவசரமாக பணிகள் முடித்து கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழாவில் கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. பணிகள் முடியாமலேயே இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டதால் அரைகுறையான குடிநீரே சப்ளை செய்யப்பட்டது.நாளொன்றுக்கு நகராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீரில் 50 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. மழை காலத்திலேயே இந்தநிலை என்றால் கோடைகாலத்தில் என்னவாகும் என தெரியவில்லை.ஆனால், இதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மறுக்கின்றனர். நாளொன்றுக்கு 4 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். படிப்படியாக கடலோர கிராமங்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் பாதாள சாக்கடைத்திட்டத்திற்கும்; கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் நகராட்சி பல கோடிகளை செலுத்தியுள்ளது.இப்படி பல கோடிகளை செலவழித்ததால் நகராட்சி நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் கண்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் போடவே பணம் இல்லாமல் திண்டாடி வருகிறது. நகராட்சியால் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகோள முடியவில்லை.இதனால் நகராட்சிக்கு வரும் அதிகாரிகளும் நமக்கு ஏன் வம்பு என தப்பித்தால் போதும் என டிரான்ஸ்பர் வாங்கிச் சென்றுவிடும் நிலை உள்ளது. அரசு திட்டங்களுக்காக நகராட்சி இவ்வளவு பெரும் தொகையை பங்களி்ப்பாக வழங்கியும் இத்திட்டங்களால் மக்களுக்கு பயன்பாடு என்பது இன்னமும் கேள்விக் குறியாகத் தான் உள்ளது.

மூலக்கதை