மக்கள் வரிப்பணம் ரூ.1 கோடி... 'ஸ்வாகா!' உலகத்தர நடைபாதை இடிப்பு

தினமலர்  தினமலர்
மக்கள் வரிப்பணம் ரூ.1 கோடி... ஸ்வாகா! உலகத்தர நடைபாதை இடிப்பு

ராயப்பேட்டை: ராயப்பேட்டை, பட்டுல்லாஸ் சாலையில், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, உலகத்தர நடைபாதையை, இரண்டரை ஆண்டிற்குள் மாநகராட்சி இடித்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை, பட்டுல்லாஸ் சாலையில், பேருந்து பணிமனை, மால், தனியார் நிறுவனங்கள் உள்ளன.வீண் செலவுஅண்ணா சாலை ஒருவழிப் பாதையாக இருப்பதால், எழும்பூரில் இருந்து, கிண்டி மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள், இச்சாலையை பயன்படுத்துகின்றன. இதனால், எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். சென்னை மாநகராட்சி, உலகத்தர நடைபாதை அமைத்த போது, பட்டுல்லாஸ் சாலையிலும், திட்டத்தை செயல்படுத்தியது.

மின்வடம், தொலைதொடர்பு நிறுவனங்களின் வடங்கள் செல்ல, 'டக்ட்' என்ற தனி பாதையுடன் கூடிய, உலகத்தர நடைபாதை, 2015ல், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இந்த நடைபாதையை, மாநகராட்சி தற்போது இடித்துவிட்டு, அங்கு, 80 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, சமூகஆர்வலர்கள் கூறியதாவது:பட்டுல்லாஸ் சாலையில், 2015ல் அமைக்கப்பட்ட உலக தர நடைபாதையை இடித்துவிட்டு, மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர்.

தொடரும்:
இச்சாலையில், ஒரு புறம் மழைநீர் வடிகால் உள்ளது; அதையே அகலப்படுத்தி இருக்கலாம்.உலக தர நடைபாதையை இடித்ததால், வடங்கள் வெளியே கிடக்கின்றன. இதனால் அடுத்தடுத்து, சேவை நிறுவனங்களால், பட்டுல்லாஸ் சாலை தோண்டப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மீண்டும்... மீண்டும்!
சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பட்டுல்லாஸ் சாலையில் வெள்ளம் வாரக்கணக்கில் தேங்கியது. சாலை, நடைபாதையை வெட்டி, தேங்கிய மழைநீரை மாநகராட்சி வெளியேற்றியது.இது குறித்து, நமது நாளிதழில் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில், மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கின்றனர்.

மூலக்கதை