சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் பதற்றம்... 144 தடை உத்தரவு வாபஸ் : மேலும் 2 பெண்கள் இன்று தரிசனத்துக்கு முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் பதற்றம்... 144 தடை உத்தரவு வாபஸ் : மேலும் 2 பெண்கள் இன்று தரிசனத்துக்கு முயற்சி

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை மேலும் 2 இளம் பெண்கள் தரிசனத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழ் நிலை நிலவி வரும் நிலையில், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்களும் தரிசிக்கல்லாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்கள் போராட்டம் நடத்தி அவர்களை திருப்பி அனுப்பினர்.

கடந்த 2ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம் பெண்களை போலீசார் சன்னிதானத்துக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். பின்னர் அவர்கள் திரும்பி சென்றதும் வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.

அதன்பிறகே சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து கேரளாவில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது.

பாஜ எம்பி முரளிதரன், சிபிஎம் எம்எல்ஏ ஷம்சீர் ஆகியோர் வீடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். வரும் 20ம் தேதி காலை 6. 30 மணிக்கு நடை சாத்தப்படும்.

19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா ஆகிய இருவரும் பம்பை வந்தனர்.

தாங்கள் தரிசனம் செய்ய செல்வதால் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என இருவரும் கூறினர். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப்குமார் தலைமையில் போலீசார் இரு பெண்களுக்கும் கவச உடையும், ஹெல்மெட்டும் அணிவித்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

காலை 4. 30 மணியளவில் இருவரும் நீலிமலையை அடைந்தனர். இருவரையும் பார்த்த பக்தர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த தகவல் அறிந்ததும் அங்கு மேலும் பல பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

நேரம் செல்ல செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.   இதையடுத்து இருவரிடமும் சன்னிதானத்துக்கு செல்ல முடியாது என போலீசார் கூறினர்.

ஆனால் உயிரே போனாலும் தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டோம் என்று இருவரும் கூறினர். இதனால் 3 மணிநேரத்துக்கும் மேல் இருவரையும் பக்தர்கள் சிறை வைத்தனர்.

இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என போலீசார் கருதியதால் இருவரையும் ஜீப்பில் ஏற்றி பம்பைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பம்பை அழைத்து சென்ற பின்னர் இருவரையும் எரிமேலிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சபரிமலையில் கடந்த ஐப்பசி மாத பூஜை முதல் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

இதனால் சபரிமலையில் போராட்டம் நடத்திய பாஜ தலைவர்கள்  உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 14ம் தேதி  மகரவிளக்கு பூஜை முடிந்ததை தொடர்ந்து அன்று இரவுடன் 144 தடை உத்தரவு வாபஸ்  பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரேஷ்மா நிஷாந்த் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘நான் உச்சநீதிமன்ற உத்தரவு வந்த உடனேயே மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினேன். 100 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து வருகிறேன்.

ஐயப்பனை தரிசனம் செய்யாமல் மாலையை கழற்றக்கூடாது என்பது ஆச்சாரமாகும்.

எனவே நான் தரிசனம் செய்யால் திரும்பி செல்ல போவதில்லை’’ என்றார்.

.

மூலக்கதை