மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதச்சார்பற்ற ஜனதா தளம்  காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் :2 சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ்

* பிஜேபி முகாமில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
* மேலும் ‘விக்கெட்’ சரியும் என அமைச்சர் தகவல்

பெங்களூரு : கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்ற நிலையில், பாஜவை சேர்ந்த 104 எம்எல்ஏக்கள் குர்கிராமில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் மேலும் ‘விக்கெட்’ சரியும் என்று மகாராஷ்டிரா பாஜ அமைச்சர் தெரிவித்துள்ளால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில், கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேர், பாஜவில் சேர இருப்பதாகவும், இவர்கள் மும்பையில் பாஜவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்ததாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், எச். நாகேஷ், ஆர். சங்கர் ஆகிய 2 சுயேட்சை எம்எல்ஏக்கள், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, கர்நாடக ஆளுநர்  வாஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தொடர்ந்து சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் கூறுகையில், ‘‘திறமையான அரசாங்கத்தை ஏற்படுத்தவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றோம்’’ என்றனர்.



சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவர் ஆதரவை  வாபஸ் பெற்றிருப்பது குறித்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து கூறுகையில், ‘‘வெறும், இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ்  பெற்றிருப்பதால், ஆட்சி கவிழ்ந்துவிடாது. நான் எந்த பதற்றமும் இல்லாமல்  இருக்கிறேன்.

என்னுடைய அரசின் பலம் எனக்குத் தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வரும் செய்திகளை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், ‘‘பணத்தையும்,  அதிகாரத்தையும் வைத்து எங்கள் கூட்டணி எம்எல்ஏக்களை வளைத்து பார்க்கும்  பாஜ கட்சியின் முயற்சி தோல்வியில் முடியும்’’ என்றார். ேமலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், ‘‘கர்நாடகத்தில் பாஜ கட்சி ‘ஆபரேஷன் லோட்டஸை’ தொடங்கியுள்ளது.

மும்பையில் உள்ள ஓட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பாஜ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது’’ என்றார். இதற்கிடையே, பாஜவின் 104 எம்எல்ஏக்கள் அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாஜவின் அடுத்தடுத்த நகர்வுகளால், மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜ பக்கம் சாய திட்டமிட்டுள்ள 4 எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே, ஆட்சி தப்புமா? தப்பாதா? என்பது தெரியவரும்.

கர்நாடக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 224. பாஜ கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 104 ஆக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க, 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

ஆனால், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தைவிட, 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது.   இதனோடு, 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளித்து வந்த நிலையில், தங்கள் ஆதரவை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். பெரும்பான்மை பலத்துக்கு மேலே 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூடுதலாக உள்ளதால், பாஜ பக்கம் சாயவுள்ள 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களால் கூட்டணி அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தும் நிலவுகிறது.

இருந்தும், கூட்டணி அரசை கவிழ்க்க பாஜ தலைமை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ராம் சிண்டே கூறுகையில், ‘‘மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் நீடிக்காது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அடுத்த சில ‘விக்கெட்’களை இழக்கும்’’ என்றார்.

.

மூலக்கதை