ஆளில்லா குட்டி விமான சரக்கு சேவைக்கு அனுமதி

தினமலர்  தினமலர்
ஆளில்லா குட்டி விமான சரக்கு சேவைக்கு அனுமதி

புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான இரண்டாவது வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஆகஸ்டில், ஆளில்லா குட்டி விமானங்கள் தொடர்பான, முதல் வரைவு கொள்கை வெளியிடப்பட்டது.அதில், தனி நபர் மற்றும் நிறுவனங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து, இதர இடங்களில், உரிய உரிமத்துடன், ஆளில்லா குட்டி விமானங்களை இயக்க அனுமதி தரப்பட்டது. ஆனால், வர்த்தக பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையடுத்து, உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், வர்த்தகத்திற்கும் டிரோன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து மத்திய அரசு, வர்த்தக ரீதியில் டிரோன்களை பயன்படுத்துவதற்கான, ‘டிரோன் – 2’ வரைவு கொள்கையை உருவாக்கியுள்ளது.

முதலிடம்:
இதை, டில்லியில் நடைபெற்ற, சர்வதேச விமான போக்குவரத்து மாநாட்டில், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: வர்த்தக ரீதியில், தொலை துாரத்திற்கும் ஆளில்லா குட்டி விமான சேவைகளை இயக்க, வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப விபரங்களுடன் கூடிய விதிமுறைகளை, விமான போக்குவரத்து துறை செயலர் தலைமையிலான குழு, இறுதி செய்யும்.விமான துறையிலும், ‘ஸ்டார்ட் அப்’ தொழிலிலும், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அளவில், ஆளில்லா விமான சேவையில் முதலிடம் பிடிப்பதற்கான ஆற்றல், இந்தியாவுக்கு உள்ளது.

இவ்வகை விமான சேவைகள், சரக்கு போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும்.குறிப்பாக, சரக்குகளை சங்கிலித் தொடர் போல கொண்டு செல்ல, இச்சேவை பெரிதும் உதவும். அதுபோல, தட்பவெப்பச் சூழலுக்கு முக்கியத்துவம் உள்ள, உடல் உறுப்புகள் போன்றவற்றை கொண்டு செல்லவும், அவசர சிகிச்சைக்கு, உயிர் காக்கும் மருந்துகள், ரத்தம் உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் சேர்க்கவும் துணை புரியும்.

நோயாளியின், ரத்த மாதிரியை உடனடியாக, பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட சேவைகளை, ஆளில்லா விமானங்கள் மூலம் மேற்கொள்ளலாம்.ஆளில்லா விமானங்கள் புறப்படவும், இறங்கவும், குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படும். விதிமுறைகளின் படி, உரிய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நிறுவனங்களுக்கு, ஆளில்லா விமான தளங்களை பயன்படுத்தும் உரிமம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி கிடையாது:
மத்திய அரசின் வரைவு கொள்கையில், நுண், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரியது என, ஆளில்லா விமானங்கள், ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட பகுதியில், இவ்விமானங்களை இயக்க, வான் பாதுகாப்பு மையத்தின் அனுமதியை பெற வேண்டும். பார்லிமென்ட், மாநில சட்டசபைகள், தலைமை செயலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி இல்லை. அமெரிக்காவின், ‘அமேசான்’ நிறுவனம், முதன் முதலாக, பிரிட்டன் புறநகர் பகுதிக்கு, ஆளில்லா விமானம் மூலம், ஒரு மூட்டை மக்காச்சோளத்தை வெற்றிகரமாக அனுப்பியது.

மூலக்கதை