மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 47 பேர் காயம்

PARIS TAMIL  PARIS TAMIL
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 47 பேர் காயம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தன.
 
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.  இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் காலை 8.15க்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்து உள்ளது.  ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 8 சுற்றுகள் நடந்தன.  இந்த போட்டியில் 47 பேர் காயம் அடைந்தனர்.  அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை