10 % இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஏதுவாக கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: மத்திய அரசு

PARIS TAMIL  PARIS TAMIL
10 % இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஏதுவாக கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: மத்திய அரசு

நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுவது இல்லை. எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும்  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரிகளில் கூடுதல் இடம்

இந்த நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- “ நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு, ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவு இட ஒதுக்கீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், கல்வி நிலையங்களில் 25 சதவீத இடங்கள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 கல்வி ஆண்டில் இருந்து இந்த மாற்றப்பட்ட முறை பின்பற்றப்படும்” என்றார்.

யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகிய அமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் இந்த இட ஒதுக்கீடு முறை அதாவது தனியார் மற்றும் அரசு என அனைத்து நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மூலக்கதை