பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை, இந்தியா விஞ்சும் * 2030ல் உலகளவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்

தினமலர்  தினமலர்
பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை, இந்தியா விஞ்சும் * 2030ல் உலகளவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்

புதுடில்லி:அடுத்த பத்தாண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் ஆய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.அன்னியச் செலாவணி விகிதாச்சார அடிப்படையில், வளரும் நாடுகளின் வாங்கும் சக்தி மற்றும் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலவரப்படி தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



வளரும் நாடுகளைச் சேர்ந்த, ஏழு நாடுகள், 2030ல், உலகின் 'டாப் 10' பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம் பெறும்.


சீர்திருத்தம்


இந்தியா, பல்வேறு சீர்திருத்தங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவதால், அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காணும். ஜி.எஸ்.டி., அறிமுகம், திவால் சட்ட அமலாக்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக, முதலீடுகள் அதிகரிக்கும். வரும், 2020ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உ ற்பத்தி, 7.8 சதவீதமாக வளர்ச்சி காணும்இது, நடப்பு ஆண்டில், 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதை விட, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருக்கும். எனினும், அடுத்த பத்தாண்டுகளில், இவ்வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருக்கும்.சீனாவின் மக்கள் தொகை அடிப்படையிலான தேவைப்பாடும், அதற்கேற்ப உற்பத்தி விகிதமும் அதிகம். அதனால், 2020களின் துவக்கத்தில், சீனா, உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்காவை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறும்.


அதேசமயம், 2030ல், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதம் என்ற அளவில், மிதமாக காணப்படும்.


ஆசியா


இந்தியா, 2030ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், சீனாவிற்கு அடுத்து, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.அதேசமயம், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை, உலகின் 'டாப் 5' பொருளாதார நாடுகளில் தொடர்ந்து இடம் பெறும்.


உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஆசிய பிராந்தியம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இது, 2030ல், 30 சதவீதமாக உயரும்.ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், முதல் ஐந்து இடங்களில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த, இந்தோனேஷியா இடம் பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அன்னியச் செலாவணி பரிமாற்ற விகிதப்படி, வாங்கும் சக்தி அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு:

2020ம் ஆண்டு
..........................
சீனா – 29.90
அமெரிக்கா – 22.20
இந்தியா – 13.40
ஜப்பான் – 5.80
ஜெர்மனி – 4.60
.............................
(லட்சம் கோடி டாலர்)

......................
2030ம் ஆண்டு
..........................
சீனா – 64.20
இந்தியா – 46.30
அமெரிக்கா – 31.00
ஜப்பான் – 7.20
ஜெர்மனி – 6.30
.............................
(லட்சம் கோடி டாலர்)


மூலக்கதை