உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அமைச்சரவை 18-ந் தேதி கூடுகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அமைச்சரவை 18ந் தேதி கூடுகிறது

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க இருக்கின்றன.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கோரியுள்ள நிறுவனங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் நவீன முறையில் விரிவாக்கம் மற்றும் சலுகைகள் கோரி அரசுக்கு விண்ணப்பித்து உள்ளன. அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் கடந்த 3-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்ததும் வருகிற 18-ந் தேதி மீண்டும் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை