பா.ஜனதாவுடன் கூட்டணியா? ‘தேர்தல் வரும்போது எதுவும் நடக்கலாம்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜனதாவுடன் கூட்டணியா? ‘தேர்தல் வரும்போது எதுவும் நடக்கலாம்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் தமிழக கட்சிகள் கூட்டணி வியூகங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க. இன்னும் தனது நிலைப்பாடு குறித்து வெளியிடவில்லை.
 
இந்த நிலையில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டணி குறித்து உடனடியாக பேசி முடிக்கப்படும். ஆனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையே தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாகவும், தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளும் இணைய இருப்பதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் யூகங்களின் அடிப்படையிலானவை. அதில் உண்மையில்லை.

பாரதீய ஜனதா கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகளுக்காக கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவர் கூறியது போல ஆண்டுக்கு ஆண்டு கூட்டணி மாறியிருக்கிறது. பா.ஜனதா கட்சியினர் எங்களுடனும் (அ.தி.மு.க.), பின்னர் தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்தார்கள். அந்தவகையில் அரசியல் ரீதியாக கூட்டணி மாறுபடும். தேர்தல் வரும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.

கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள சக்தியற்றதால் இதுபோன்ற தவறான அவதூறுகளை பரப்பி அரசியல் லாபம் தேட நினைக்கின்றனர். இது நடக்காது. எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம். அதில் நிச்சயமாக வெற்றி பொறுவோம். நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது.

கோடநாடு விவகாரத்தில் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதை காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என ஊடகங்களில் தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம். இதில் யாரிடமாவது ஆதாரம் இருந்தால், அதை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக 27-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை