உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் அதிரடி மாயாவதி - தேஜஸ்வி யாதவ் திடீர் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் அதிரடி மாயாவதி  தேஜஸ்வி யாதவ் திடீர் சந்திப்பு

லக்னோ : மத்திய பாஜ அரசுக்கு எதிராக வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கூட்டணி முடிந்த நிலையில், மாயாவதியை லாலு மகன் தேஜஸ்வி திடீரென சந்தித்து பீகார் அரசியல் நிலைமை குறித்து பேசினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

அதன்படி, மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.

அத்துடன், தங்களது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு இரு இடங்களை ஒதுக்கியுள்ளன. இதுதொடர்பாக, இரு தலைவர்களும் கூறுகையில், ‘‘எங்களது கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை.

முன்பு காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்திருக்கலாம்; ஆனால், இனி அந்த வாய்ப்புக்கு இடமில்லை. கடந்த கால தேர்தல்களில் எங்களது வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது.

ஆனால், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அவர்களது வாக்குகள் எங்களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை’’ என்றனர். மேற்கண்ட கட்சிகளின் கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கூட்டணியை முடித்துக் கொண்ட மாயாவதி, பீகாரில் பாஜ-ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 18, காங்.

- 10, ராஷ்ட்ரீய லோக் சமதா மற்றும் இடதுசாரிகளுக்கு தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 20 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.


இதற்கிடையே, மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையில் இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சை, அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார். இந்நிலையில், தேஜஸ்வி யாதவ், உத்தரபிரதேச கூட்டணி உடன்பாடு தொடர்பாக மாயாவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணியை மக்கள் வரவேற்றுள்ளனர். மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும்.

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. பீகாரிலும் முற்றிலுமாக பாஜவை மக்கள் புறக்கணித்து விடுவார்கள்’’ என்றார்.

இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இருந்தும், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை