பிரெக்ஸிற் திட்டத்தை தடுக்க தீவிர முயற்சி!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெக்ஸிற் திட்டத்தை தடுக்க தீவிர முயற்சி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்தை தடுப்பதில் சிலர் குறியாக உள்ளனர் என பிரதமர் தெரேசா மே குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
உடன்பாடுகளின்றி பிரித்தானியா வெளியேறுவதற்கு வழிவிடுவதைவிட, திட்டத்தை முழுமையாக நிராகரிப்பதையே சிலர் விரும்புகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரெக்ஸிற் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கும் பட்சத்தில் பிரதமர் தெரேசா மே-யிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னணியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
நாளை பிரெக்ஸிற் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதனை வெற்றிகொள்ளும் இறுதி போராட்டத்தில் பிரதமர் மே உள்ளார். அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பிரித்தானிய மக்களின் விருப்பம் மற்றும் நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, குறித்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமென பிரதமர் மே வலியுறுத்தவுள்ளார்.
 
பிரெக்ஸிற் திட்டத்தை மறுப்பதானது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அமையுமென அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக தீர்மானித்துள்ளது. அதனை தீர்மானிக்கும் இறுதி வாக்கெடுப்பாக நாளைய வாக்கெடுப்பு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை