அகிலேஷ் - மாயாவதி கழற்றிவிட்டதன் எதிரொலி உத்தரபிரதேசத்தில் காங். தனித்து போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அகிலேஷ்  மாயாவதி கழற்றிவிட்டதன் எதிரொலி உத்தரபிரதேசத்தில் காங். தனித்து போட்டி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம் அளிக்கப்படாததை அடுத்து, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், குலாம்நபி ஆசாத் தலைமையில் இன்று மாலை லக்னோவில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைத்தனர். ஆனால், இருவருக்கும் இடையிலான கூட்டணி சீக்கிரமே முறிந்தது.

அதே நேரத்தில் கடந்தாண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த 3 இடைத் தேர்தலில் மீண்டும் சேர்ந்து நின்றனர். அதில் பாஜவை 3 தொகுதியிலும் அவர்கள் கூட்டணி தோற்கடித்தது.

இதைத் தொடர்ந்து இருகட்சிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க உறுதி செய்துள்ளன.

அதன்படி, உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 தொகுதிகள் தற்போதைக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணி போட்டியிடாது என்று தெரிகிறது.

அகிலேஷ் - மாயாவதி கூட்டணியால், காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் ஆளும் பாஜ கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய பாஜ, தற்போது மீண்டும் அந்த தொகுதிகளை கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காதது குறித்து கலந்தாலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் லக்னோவில் இன்று மாலை சந்திக்கின்றனர். இருந்தும், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டது.

இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்தோ, அதில் காங்கிரஸ் சேர்க்கப்படாதது குறித்தோ உடனடியாக கருத்து கூற இயலாது.

மத்திய மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேச பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். மக்களவைத் தேர்தலுக்காக மாவட்ட அளவிலான தயார் நிலை குறித்து அப்போது ஆராயப்படும்’’ என்றார்.

இதுகுறித்து, உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் தொடர்பாக கலந்தாலோசிக்க குலாம் நபி ஆசாத், கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் லக்னோவில் இன்று மாலை வருகின்றனர். இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய கமிட்டியில் உள்ள உத்தரப் பிரதேசத் தலைவர்கள் அனைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களும் பங்கேற்கின்றனர்’ என்றார்.

‘உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்லக் கூடும்’ என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுவதால், ‘மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியே இல்லை’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து உ. பி. முதல்வர் ஆதித்யநாத், “எவ்வளவு பெரிய கூட்டணி பாஜவுக்கு எதிராக அமைந்தாலும் சரி, நாங்கள் 2014ம் ஆண்டைவிட இந்த முறை மிகச் சிறப்பான வெற்றியைப் பெறுவோம்.

வெகு நாட்களாக அரசியல் எதிரிகளாக இருந்த இருவர், ‘மகா கூட்டணி’ குறித்து பேசுகிறார்கள்.

சர்வாதிகாரத்துக்கும், ஊழலுக்கும், ஸ்திரமற்ற ஆட்சிக்கும்தான் இந்தக் கூட்டணி வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை