மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மூலக்கதை