பாஜக ஆட்சியில் சின்னஞ்சிறு ஊழல் கூட நடைபெறுவதில்லை: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
பாஜக ஆட்சியில் சின்னஞ்சிறு ஊழல் கூட நடைபெறுவதில்லை: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2019 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியினருக்கு அறிவுரை வழங்கி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர்கள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்பட சுமார் 12,000 பேர் பங்கேற்றனர். கூட்டத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கொடியை ஏற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பின்னர் உரையாற்றிய அமித் ஷா, மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ராமர் கோவில் கட்டுவதற்கு ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார். உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை என்றும் 2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்றார். 2019 மக்களவை தேர்தலில் மோடி மற்றும் கொள்கை இல்லாத கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். அப்போது, அமைப்பு ரீதியாக நமது பலமே வெற்றிக்கு வழிகாட்டுகிறது. பாஜக ஆட்சியில் சின்னஞ்சிறு ஊழல் கூட நடைபெறுவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த போதிலும் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேறியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா பாரதிய ஜனதா கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தை தந்துள்ளது. அதை அடிப்படையாக கொண்டு விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் நலனில் அக்கறை காட்டும் வகையில் சமூகநீதிக்காக போராடும் கட்சி என தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை