ஜன. 31ல் மத்திய பாஜ அரசின் கடைசி மக்களவை கூட்டம் துவக்கம்..... இடைக்கால பட்ஜெட் பிப். 1ம் தேதி தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜன. 31ல் மத்திய பாஜ அரசின் கடைசி மக்களவை கூட்டம் துவக்கம்..... இடைக்கால பட்ஜெட் பிப். 1ம் தேதி தாக்கல்

* தேர்தலுக்காக ‘சலுகை’ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதுெடல்லி: வரும் 31ம் தேதி மத்திய பாஜ அரசின் கடைசி மக்களவை கூட்டம் துவங்கவுள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத்தேர்தல் ஒருசில மாதங்களில் வரவுள்ளதால், இந்த பட்ஜெட்டில் தேர்தலுக்கான சலுகை அறிவிப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் முழுமையான நிதிநிலையை தயாரிக்க முடியாதபோது அல்லது மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த பட்ஜெட்டில் முக்கியமான தேவைகளுக்கு முதலில் நிதி ஒதுக்கப்படும்.

அதேநேரம் மக்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அவ்வாறு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ஒதுக்கப்படும் நிதியை, அந்த நிதியாண்டின் இறுதி வரை அதாவது மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செலவு செய்ய முடியும்.

அதன்படி,  இடைக்கால பட்ஜெட்டின்போது நாடாளுமன்றத்தில் vote-on-account மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அடுத்த நிதி ஆண்டுக்கு தேவையான நிதியைப் பெற நாடாளுமன்றம் எளிதாக வாக்கெடுப்பின் மூலம் அனுமதியை வழங்கும். தேர்தல் நேரங்களில் vote-on-account அனுமதி 4 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.



இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் சில மாதங்களுக்குள் தேர்தல் வரும் என்பதால் பெரிய மாற்றங்கள் இருக்காது.

மேலும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பாஜ ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் (2019 - 2020) தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படுவதற்கான நாள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதற்கிடையே, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி மாதம் 31ம் தேதி உரை நிகழ்த்த வாய்ப்புள்ளது. அன்றையதினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படலாம்.

வழக்கமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் இருபகுதிகளாக நடைபெறும்.

ஆனால், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலும் மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரே பகுதியாக நடத்தப்படும். தற்போதைய பாஜ அரசின் கடைசி மக்களவை கூட்டம் என்பதால், பொதுத் தேர்தலை மையப்படுத்தி, வரிவிகிதங்களை குறைக்கவும், புதிய சலுகை அறிவிப்பை வெளியிடவும் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனை வைத்தே  தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவர முடியும் என்பதால், ஆளும்  கட்சிகளுக்கு இந்தப் பட்ஜெட் கூடுதல் ஆதாயத்தினை அளிக்கும்.
கடந்த 2014ம்  ஆண்டுப் பிப்ரவரி இறுதியில் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்  செய்தார்.

தற்போது பிரதமர் மோடி அரசு பட்ஜெட் தாக்கல் தேதியினைப் பிப்ரவரி 1ம்  தேதிக்கு மாற்றியுள்ளது. இதனால், ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டுச்  செய்யப்படும் திட்டப்பணிகள், தற்போது ஏப்ரல் மாதம் முதலே  தொடங்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, மத்திய நிதி அமைச்சகம் அனைத்துத் துறை  அமைச்சகங்களிடம் இருந்து தங்களது தேவைகள் குறித்துத் தகவல் பெற்று அறிக்கை தயார் செய்து வைத்துள்ளது.

எனவே, இந்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்கான புதிய சலுகை அறிவிப்புகள், வரிவிகிதங்களில் மாற்றம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை