விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் சாதனையாக அமையும்

தினகரன்  தினகரன்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் சாதனையாக அமையும்

பெங்களூரு: விண்வெளிக்கு  மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் ‘ககன்யான்’ திட்டம் இந்தியாவின்   வரலாற்று சாதனையாக அமையும், என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறினார்.பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இஸ்ரோ,  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். விண்வெளியில் மற்ற நாடுகளுடன்  ஒப்பிடும்போது நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். அத்துடன் பிற நாடுகளின்  செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்தியும் வருகிறோம்.  இது நம்  அனைவருக்கும் பெருமை.. 2019ம் ஆண்டு இஸ்ரோவுக்கு மட்டும் இன்றி  ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் சாதனை ஆண்டாக இருக்கும் என கூற  விரும்புகிறேன். மத்திய அரசு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி  ஆராய்ச்சி மேற்கொள்ளும்  “ககன்யான்” திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.  அது மட்டுமின்றி ஜி சாட் -20,  சந்திராயன்-2 ஆகிய திட்டங்களும் இஸ்ரோவின்  சாதனை மைல் கற்களாக அமையும். விண்வெளிக்கு  மனிதர்களை அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தொடங்கி  விட்டன. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் ்  இந்தியர்களாகவே இருப்பார்கள். 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ககன்யான்  விண்ணில் ஆளில்லாமல் இயக்கி சோதனை மேற்கொள்ளப்படும். அதன் சாதக பாதக  அம்சங்கள் அனைத்தும் கவனமாக பரிசோதனை செய்யப்பட்டு தவறுகள் இருந்தால் அதை  சரி செய்த பிறகு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது சோதனை பயணம்  மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட்  மாதம் விண்வெளி துறையில் இஸ்ரோ  மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் வரலாற்று நிகழ்வான  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அமல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் போது பெண்  ஒருவரும் இடம் பெறுகிறார். இந்தியாவின் வரலாற்று சாதனை நிகழும் போது நமது  சகோதரருடன், சகோதரியும் அதில் இடம் பெறவேண்டும் என்பதற்காக இந்த முடிவு  எடுக்கப்பட்டது. சந்திராயன்-2 , நிலவின் தெற்கு புலத்தில் தரையிறங்கி  ஆய்வு மேற்கொள்கிறது. ரோவர் வாகனம் 500 மீட்டர் தூரத்திற்கு சென்று சில  ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாகியுள்ளது. விண்வெளி மிகவும்  புதிரானது. அதில் நாம் சிறிதளவு அறிந்துள்ளோம். அறியாதவை மிகவும் அதிகம்.  அதை அறிவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இதுதவிர ஆதித்யா-2020,   வீனஸ்- 2023 போன்ற தொலைநோக்கு திட்டங்களும் இஸ்ரோவின் எதிர்கால பயண கால  அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை