சிறு வணிகர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் :

தினமலர்  தினமலர்
சிறு வணிகர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் :

புதுடில்லி: நேற்று முன்தினம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., விலக்கிற்கான விற்றுமுதல் வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து, சிறு வணிகர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:உத்தர பிரதேச அரசு, சிறிய வியாபாரிகளுக்கு என, பிரத்யேகவிபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.அதை பின்பற்றி, நாடு முழுவதும், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கும், விபத்து காப்பீடு வசதியை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதில், ஆண்டு விற்றுமுதல் அடிப்படையில், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு வசதி கிடைக்கும்; இதற்கான பிரிமியமும் மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்படும். இம்மாத இறுதிக்குள், இந்த திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.சலுகையுடன் நிதியுதவிதற்போது, அனைத்து செயல்பாடுகளுக்கும் கணினியின் பயன்பாடு இன்றியமையாததாக மாறி வருகிறது. அதனால், சிறிய வியாபாரிகளும் தங்கள் தொழிலில், கணினியை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.தொழிலில் கணினியை பயன்படுத்த விரும்பும்வணிகர்களுக்கு, சலுகையுடன் நிதியுதவி வழங்கும் திட்டமும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.இதன் மூலம், சிறு தொழில் செய்வோர் கூட, தொழில்நுட்ப வசதி மூலம், சந்தை போட்டியை சமாளிக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.இது தவிர, பெண் தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக, சிறப்பு கொள்கையை உருவாக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொள்முதல்


இதில், பெண் தொழில்முனைவோரின் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.தற்போது, அரசு துறைகளும், பொதுத் துறை நிறுவனங்களும், ஓராண்டில் கொள்முதல் செய்யும் பொருட்களில், குறைந்தபட்சம், 20 சதவீதத்தை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.இதில், குறிப்பிட்ட சதவீதத்தை, பெண் தொழில்முனைவோரிடம் கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கவும், அவர்களின் கடனுக்கு வட்டிச் சலுகை வழங்குவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.விரைவில், இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடனுக்கு, 59 நிமிடங்களில் ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிமுகமானது. அத்துடன், இத்துறையினருக்கான தொழிலாளர் சட்டங்களும், சுற்றுச்சூழல் விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன.
'பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா'வங்கி கணக்கு வைத்துள்ளோருக்கு, 'பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா' திட்டத்தின் கீழ், விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த, 2015, மே 9ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 12 ரூபாய் பிரிமியம் செலுத்தி இணைவோர், 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு பெறலாம்.வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில், ஆண்டுதோறும், ஜூன் 1ல், பிரிமியம் தன்னிச்சையாக பிடித்தம் ய்யப்படுகிறது.இத்திட்டத்திற்கான வயது வரம்பு, 18 - - 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017 - -18ம் நிதியாண்டு நிலவரப்படி, 13.41 கோடி பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இது போல, சிறிய வணிகர்களுக்கு பிரத்யேக விபத்து காப்பீடு வசதியை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை