மேக்சிஸ் முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி கைது தடை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
மேக்சிஸ் முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி கைது தடை நீட்டிப்பு

புதுடெல்லி: மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை பிப்ரவரி 1ம் தேதி வரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதால் அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ.யும்., அமலாக்கத் துறையும்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன.  டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சிதம்பரமும், கார்த்தியும் மனு தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய நீதிபதி தடை விதித்தார். இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்ததால், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓபி.ஷைனி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் கைது செய்வதற்கான தடையை பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை